சென்னை: ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் கைதான 3 பேரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது, ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தால் ரூ.35 கோடி வரை லஞ்சம் தருவதாக திமுகவினர் தன்னிடம் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை மாநகரகாவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, மேடவாக்கம் தியாகராஜன், திருச்சி நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரையும் போலீஸார் தேடி வரும் நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகியுள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திருவல்லிக்கேணி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன், போலீஸாரின் மனுவுக்கு சம்பந்தப்பட்ட 3 பேர் தரப்பிலும் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7-க்கு தள்ளிவைத்தார். 3 பேரையும் அன்று நேரில் ஆஜர்படுத்துமாறும் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.