ரிக்கி ராதன் பண்டிட்
சென்னை: தவெக செய்தித் தொடர்பாளரான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் இருந்து வருகிறார். இவர் கொடுக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில்தான் விஜய் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார் என்கிறார்கள்.
ரிக்கி ராதனுக்கு தவெகவின் செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில்தான் தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் நியமிக்கப்பட்டார்.
இதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறும்போது, “அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை.
முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும்.
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல” என்று கூறினார். காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், “ஒரு ஜோதிடருக்கு ஏன் அரசு சிறப்பு அதிகாரி (OSD) பதவி வழங்கப்பட வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. யாராவது விளக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
விசிக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் வன்னியரசு, “அறிவியலுக்குப் புறம்பான நியமனத்தை திரும்பப் பெறுக. ஆஸ்தான ஜோதிடர்கள் என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில்தான் நேற்று சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பண்டிட் நியமனத்துக்கு தேமுதிக, விசிக, கொமதேக, மஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற கையோடு “மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் முகமாக முதல் வேலையாக அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்ட உத்தரவு 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்யப்படும்” என முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
அதன்படி ரிக்கி ராதனை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறுகையில், “தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ராதன் பணி நியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, “ராதன் பண்டிட்டை அரசுப் பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜோதிடர் நியமனத்தை முதல்வர் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன்.
வரும் காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமையும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இப்படியாக பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.