தமிழகம்

திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட உப்பூர் அனல் மின் நிலையம் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவு

கி.தனபாலன்

ராமநாதபுரம்: திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலைய பணியை மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் உப்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) மூலம் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஒப்பந்தம் எடுத்த பாரத் மிகுமின் நிலையம் (பெல்), எல் அண்ட் டி ஆகிய 2 நிறுவனங்கள் இம்மின் நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இத்திட்டத்துக்காக 767.83 ஏக்கர் விவசாய பட்டா நிலங்களும், 229.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்றது.

இம்மின் நிலையத்துக்கு தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டுவர, ராமநாதபுரத்திலிருந்து உப்பூருக்கு 25 கி.மீ. தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டமும் உள்ளது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் இத்திட்டத்தை கிடப் பில் போட்டது. இத்திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டு 40 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் அடுத்தக்கட்ட பணிகளை தொடர திமுக அரசு அனுமதிக்கவில்லை.

இதனால் ஒப்பந்த நிறுவனங்கள் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சென்றன. இதனையடுத்து இம்மின் நிலைய பணி கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. தொழிற்சாலைகளே இல்லாத ராமநாத புரம் மாவட்டத்துக்கு இதுபோன்ற பெரிய திட்டத்தை கொண்டு வந்தால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மாவட்டமும் பொருளாதார வளர்ச்சிபெறும் என மாவட்ட மக்கள், தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

தவெக அரசு பொறுப்பேற்றதும், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், உப்பூர் அனல்மின் நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்தார். அதனால் உப்பூர் அனல் மின் நிலைய பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன், உப்பூர் அனல்மின் நிலைய திட்டப் பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்வாரிய அதிகாரிகள் இத்திட்டத்துக்குத் தேவையான தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.

அரசு நிலங்களை பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் நில நிர்வாகத் துறையின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர். அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது ராமநாதபுரம் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் சின்னையா, அல்லி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT