சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன் படி, மருத்துவர்களுக்கு உரிய காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
தீர்வு கிடைக்காத நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக, மருத்துவர் அகிலன் கூறும்போது, ‘அரசின் இறுதி முடிவு வரும் வரை, நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி மருத்துவமனை வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடரத் தீர்மானித்தோம்.
இருப்பினும், மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தற்காலிகமாக எங்களது போராட்டத்தை தள்ளி வைக்கிறோம்.
விரைவில் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று போராட்டத்தைத் தொடங்குவோம்” என்றார்.