சென்னை: திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஒட்டுமொத்த மருத்துவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
முதல்வர் விஜய் ஆட்சியில், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், தமிழகம் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும் என நம்புகிறோம். கடந்த திமுக ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட துறையாக சுகாதாரத்துறை இருந்தது.
மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது அரசு மருத்துவர்களுக்கு நேரில் அளித்த வாக்குறுதியை கடைசி வரை நிறைவேற்றவில்லை. கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு வேலையை கூட தர அக்கறை காட்டவில்லை.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ள நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மிக முக்கிய துறையான மகப்பேறு துறையில் கூட மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாகவே இருந்தது.
கரோனா பேரிடரில் உயிரிழப்பை வெகுவாக குறைத்ததில் அரசு மருத்துவர்களின் பங்கு அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அந்த பேரிடரில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் மீது 5 வருடங்களுமே மு.க. ஸ்டாலினின் பார்வை விழவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.
முதல்வர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், விளிம்பு நிலை மக்கள் பெரிதும் நம்பியுள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டுவார் என எதிர்பார்க்கிறோம்.
உயிர்காக்கும் துறையான சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதனால், மருத்துவர்களை தொடர்ந்து போராட வைப்பதை நம் முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என நம்புகிறோம். உயிர்காக்கும் மருத்துவர்களை உற்சாகமாக பணியாற்றிடும் வகையில் அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார் என நம்புகிறோம்.
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலைக்கான ஆணையை தமிழக முதல்வரின் கைகளால் வழங்க வேண்டுகிறோம். அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.