காரைக்காலில் கேலரியுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமையுள்ள உப்பளம் திடல். | படம்: வீ.தமிழன்பன் |

 
தமிழகம்

காரைக்கால் உப்பளத்தில் அரசு கிரிக்கெட் மைதானம் - நிறைவேறும் 35 ஆண்டு கால கனவு!

வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் வீரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், உப்பளம் திடலில் கேலரியுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், முறையான பயிற்சி பெறவும், போட்டிகளை நடத்தவும் போதிய வசதிகளுடன் கூடிய மைதானம் இல்லாதது நீண்டகாலக் குறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், காரைக்காலில் சுமார் 35 ஆண்டுகளாக இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வரும் அரசுக்குச் சொந்தமான உப்பளம் திடலில், அரசு சார்பில் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் வீரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ புதுச்சேரி கிரிக்கெட் சங்க முன்னாள் செயலரும், காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முதல் தலைவருமான எம்.ராமதாஸ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: உப்பளம் திடலில் 35 ஆண்டுகளாக இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

ஆண்டுதோறும் இங்கு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்கு விளையாடும் வீரர்கள் பிசிசிஐ நடத்தும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

காரைக்காலிலேயே வீரர்களுக்கு மைதானமும், முறையான பயிற்சியும் வழங்கப்பட்டால், அவர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

இது எங்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. காரைக்காலைச் சேர்ந்தவர் புதுச்சேரி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பதால், அவரிடம் கோரிக்கை வைத்தோம்.

அதன்பேரில், இங்கு அரசு சார்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இதுகுறித்து அமைச்சர் ராஜ சேகரன் கூறியது: காரைக்கால் உப்பளம் திடலின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் கேலரியுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடவசதி இருந்தால் மேலும் இரு பக்கங்களிலும் கேலரிகள் அமைக்கப்படும்.

சிறப்பான கிரிக்கெட் மைதானமாக இது உருவாக்கப்படும். விரைவில் பூமி பூஜை நடத்தப்பட்டு, 2 அல்லது 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், “மத்திய அரசின் கேலோ இந்தியா 3.0 திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விளையாட்டு மைதானம், இருபுறங்களிலும் கேலரிகள், விளையாட்டு பயிற்சிக் கூடம் ஆகியவற்றுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அமைச்சர் மற்றும் துறை இயக்குநர் சுதாகர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்” என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT