மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ்
சென்னை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து விசிக எம்எல்ஏ ஜோதிமணி, தனது கோரிக்கைக்கு உடனே முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதற்காக நன்றி தெரிவித்தார்.
அதே போல், காங்கிரஸ் சார்பில் குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட், பாமக சார்பில் கணேஷ்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
சிபிஎம் சார்பில் பேசிய செல்லச்சாமி, சிபிஐ சார்பில் பேசிய மாரிமுத்து ஆகியோரும் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் பேசும்போது, தன்னிடம் 3, 4 கார்கள் இருப்பதாகவும், ஆனால், அரசு, எம்எல்ஏக்களுக்கு தரும் காரில் சென்றால் ‘தனி கெத்து’ என்று தெரிவித்தார்.
குடியாத்தம் தொகுதி தவெக எம்எல்ஏ சிந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, எம்ஜிஆரின், ‘கொடுத்ததெல் லாம் கொடுத்தார்... அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்’ என்ற பாடலைபாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகன், ‘இன்னோவா கார் தரவேண்டும்’ என்று வலியுறுத்தினார். பெரியகுளம் எம்எல்ஏ சபரிஐங்கரன் பேசும்போது, ‘நான் ரயிலில் தான் வருகிறேன்.
ஆட்டோ வில் இங்கு வரும்போது, காவல் துறையினர் யார் நீங்கள்? என்று கேட்பார்கள். எம்எல்ஏ என்று கூறிஐடி கார்டை எடுத்துக் காட்டினாலும் நம்பமாட்டார்கள். அதனால், இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’’ என்று கூறினார்.
அப்போது முதல்வர் எழுந்து, பேசுவது யார் என்று பார்த்து விட்டு புன்முறுவல் செய்து அமர்ந்தார். சபரி ஐங்கரனும் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தார்.