தமிழகம்

அறிவியல் கண்டுபிடிப்புகளின் மையமாக புதுச்சேரி உருவாக ஆளுநர் கைலாஷ்நாதன் விருப்பம்

அ.முன்னடியான்

புதுச்சேரி: அறிவியல் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் மையமாக புதுச்சேரி உருவாக வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா வில்லியனூர், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் விழாவில் கலந்துகொண்டு சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசும்போது, “மக்களுக்கு நன்மை தரும் செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மை, பாரம்பரிய விவசாய முறை, கிராமப்புற வளர்ச்சி, பேரிடம் மேலாண்மை போன்ற முக்கியமான கருத்துகளை அடிப்படையாகக் வைத்து இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

‘2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்’ என்ற நம்முடைய பிரதமரின் லட்சியத்தோடு இந்த கருத்துகள் பொருத்தமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

கடந்த முறை தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடந்தபோது 5 அல்லது 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் தரை துடைக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி இருந்தான். அதைப் பற்றி கேட்டபோது, வீடுகளில் அம்மாக்கள் எல்லாம் தரையை துடைக்க கஷ்டப்படுகிறார்கள். அலுவலகத்தில், ஹோட்டல்களில், வீட்டு பராமரிப்பு பணியாள்ரகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக இதை கண்டுபிடித்தேன் என்று சொன்னான். அவனுக்குள் இருந்த சமுதாய அக்கறையை பாராட்டினேன்.

அதேபோல, புதுச்சேரியை சேர்ந்த சாத்விக் என்ற இளைஞன் தம் குக்கர் ஒன்றை கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமையும் வாங்கி இருக்கிறார். இவர்களைப் போல எத்தனையோ இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்கள்தான் பிரதமர் சொன்ன ‘விக்‌ஷித் பாரத்தின் விடிவெள்ளிகள்’. இன்று உங்களில் சிலர் நல்ல அறிவியல் படைப்புக்காக பரிசும் பாராட்டும் பெறுகிறீர்கள். பரிசு பெறும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அதே நேரத்தில், இந்த கண்காட்சியில் புதுமையான சிந்தனை அடிப்படையில் ஒரு அறிவியல் மாதிரியை தயாரித்து, அது எப்படி செயல்படுகிறது என்று விளக்கிய ஒவ்வொரு மாணவரும், புதிய கண்டுபிடிப்பை உருவாக்கும் பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்து விட்டீர்கள். உங்களுடைய சிந்தனைகளை, முயற்சிகளை இன்னும் வலுப்படுத்துங்கள். உங்களில் சிலர் நாளை சிறந்த விஞ்ஞானியாக, பொறியாளராக, மருத்துவராக, சுற்றுச்சூழல் ஆர்வலர், தொழில்நுட்ப தொழில்முனைவோராக உருவாகலாம்.

கடல் பார்ப்பதற்கு ஏன் நீல நிறமாக இருக்கிறது? என்ற கேள்விதான் சர். சி.வி ராமனை உலகம் அறிந்த விஞ்ஞானியாக்கி நோபல் பரிசு பெற்று தந்தது. ராமானுஜத்தின் தீராத கணித ஆர்வம் அவரை உலகம் போற்றும் கணித மேதை ஆக்கியது. விமானத்தில் பறந்து வானத்தை அளக்க வேண்டும் என்ற எண்ணம்- நம்முடைய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமை அக்னி சிறகுகள் விரித்து விண்வெளி ஆராய்ச்சியில் உயர வைத்தது.

உங்களுடைய அறிவியல் சிந்தனை என்பது இந்த கண்காட்சியோடு முடிந்து விடக்கூடாது. நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் அறிவியல் திட்டங்களை அடையாளம் கண்டு தொழில்நுட்ப ஆலோசனையோடு அதை வலுப்படுத்த வேண்டும். சமுதாயத்துக்கு பயன் தரும் தீர்வுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அறிவியல், மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் மையமாக புதுச்சேரி உருவாக வேண்டும். அதற்கான ஆற்றல் உங்களிடம் இருப்பதை இந்த கண்காட்சியில் நான் பார்க்கிறேன். உங்களுடைய கண்டுபிடிப்பு இந்த சமுதாயத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பயன்பட வேண்டும். புதுச்சேரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT