சென்னை: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது மற்றும் தண்டனைக் குறைப்பு விவகாரத்தில் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரி்க்க முடியாது. அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான் என்று சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சீனியர் மாணவரான ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் தொடர்ந்த வழக்கின்பேரில், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதை ஆளுநர் நிராகரித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜான் டேவிட்டின் தாய், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதேபோல, ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு வழங்குவதில் ஆளுநரின் முடிவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் சென்னையிலும், உயர் நீதிமன்ற மதுரை அமர்விலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதில், ‘தமிழக அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரே. இந்த விஷயத்தில் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்தது தவறு’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு நேர்மாறாக, ‘அமைச்சரவையின் முடிவுகளை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு’ என்று மதுரை அமர்வு தீர்ப்பளித்தது.
இரு வேறு தீர்ப்புகள் அளிக்கப்பட்டதால், இது தொடர்பாக 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார். அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா,ஜி.கே.இளந்திரையன், சுந்தர் மோகன் அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டி விடுவிப்பது, தண்டனைக் குறைப்பு வழங்குவதில் அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது” என்று வாதிட்டனர். அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவோ, தண்டனை குறைப்புவழங்கவோ அமைச்சரவை விடுக்கும் பரிந்துரைகளை ஆளுநரால் நிராகரிக்க முடியாது” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பு: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டி விடுவிப்பது, தண்டனை குறைப்பு வழங்குவதில் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களை ஆளுநர் பயன்படுத்தும்போது, தனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு அவர் கட்டுப்பட்டே நடக்கவேண்டும். எந்த சூழலிலும், அமைச்சரவையின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க ஆளுநர் தனது விருப்புரிமையைப் பயன்படுத்த முடியாது.
எனவே, ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவோ, தண்டனைக் குறைப்பு வழங்கவோ அமைச்சரவை விடுக்கும் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது. அமைச்சரவையின் முடிவை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தீர்ப்பளித்தனர்.
“ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரும் வழக்குகளில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் தொடரும். இந்த தீர்ப்பின் அடிப்படையில், நிலுவையில் உள்ள வழக்குகளில் அந்தந்த அமர்வுகள் இறுதி தீர்ப்பை பிறப்பிக்கலாம்” என்றும் உத்தரவிட்டுள்ளனர்.