தமிழகம்

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி: 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு

ஜன.26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: சமூகசேவை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் சிறப்​பான பணிக்​காக 2025-ம் ஆண்​டுக்​கான தமிழக ஆளுநர் விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: சமூக சேவை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் ஈடு​பட்​டுள்ள தனி​நபர்​கள் மற்​றும் நிறு​வனங்​களின் சேவையை அங்​கீகரித்​துப் பாராட்​டும் வகை​யில் ‘தமிழக ஆளுநர் விருதுகள்​-2025’ தொடர்​பான அறி​விப்பு கடந்த 2025 ஆண்டு ஜூன் மாதம் வெளி​யிடப்​பட்​டது.

இவ்​விருதுகளுக்கு பெறப்​பட்ட விண்​ணப்​பங்​களை ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி தலை​மையி​லான தேர்​வுக்​குழு ஆய்வு செய்​தது. அந்த குழு​வின் பரிந்​துரை​யின் அடிப்​படை​யில் சமூக சேவை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு பிரிவு​களின் கீழ் விருது பெற்​றவர்​கள் விவரம் வரு​மாறு:

சமூக சேவை பிரிவு: சமூக சேவை பிரி​வில் செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் இயங்​கும் வெங்​கட்​ராமன் நினைவு அறக்​கட்​டளை​யும், தனி நபர் பிரி​வில், சென்​னையைச் சேர்ந்த ஆர்​.சி​வா, திருச்​சி​யைச் சேர்ந்த பி.​விஜயகு​மார் ஆகியோ​ரும் விருது பெறுகின்​றனர். இ​தில், வெங்​கட்​ராமன் நினைவு அறக்​கட்​டளை, கோவளம் கிராமத்​தில் உள்ள அரசுப் பள்​ளி​களை மேம்​படுத்​த​வும், கல்​வி​யின் ஒட்​டுமொத்த தரத்தை உயர்த்​த​வும் சேவை ஆற்றி வரு​கிறது.

அதே​போல், ஆர்​.சி​வா, தொழுநோ​யால் பாதிக்​கப்​பட்ட மக்​களின் மறு​வாழ்வு மற்​றும் சமூக மறுசீரமைப்​புக்​காக தன்னை அர்ப்​பணித்​துள்​ளார். பி.​விஜயகு​மார், மயானங்​களில் கைவிடப்​பட்ட மற்​றும் உரிமை கோரப்​ப​டாத சடலங்​களுக்கு இறு​திச் சடங்​கு​களை செய்து கண்​ணி​ய​மான பிரி​யா​ விடை பணியை மேற்​கொண்டு வரு​கிறார்.

சுற்​றுச்​சூழல் பாது​காப்பு பிரிவு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரி​வில் ராம​நாத​புரம் பசுமை ராமேசுவரம் அறக்​கட்​டளை​யும், தனி நபர் பிரி​வில் கோவையைச் சேர்ந்த ஆர்​.மணி​கண்​ட​னும் விருது பெறுகின்​றனர். பசுமை ராமேசுவரம் அறக்​கட்​டளை, ராமேசுவரத்​தில் கடலோரப் பகு​தி​கள் உள்பட அங்​குள்ள நீர்​நிலைகள், தாவரங்​கள், விலங்​கினங்​கள் புத்​து​யிர் பெறு​வ​தில் பெரும் பங்​காற்றி வரு​கிறது.

ஆர்​. மணி​கண்​டன், கோவை முழு​வதும் உள்ள நீர்​நிலைகளை புத்​து​யிர் பெற வைப்​ப​தி​லும் பல்​லு​யிர் பெருக்​கத்தை மீட்​டெடுப்​ப​தி​லும் முக்​கியப்பங்​காற்றி வரு​கிறார்.

விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள அமைப்​பு​களுக்கு தலா ரூ.5 லட்​சம் ரொக்​கப்​பரிசு மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழும், தனி​நபர் பிரி​வில் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு தலா ரூ.2 லட்​சம் பரிசும், பாராட்​டுச் சான்​றிதழும் வழங்​கப்​படும்.

ஜனவரி 26-ம் தேதி ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெறும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்​சி​யில் விரு​தாளர்​களுக்கு விருது வழங்கி ஆளுநர் ஆர்​.என்​.ரவி கவுர​விப்​பார்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT