சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் குழு செல்லும் சிறப்பு ரயிலை சென்னை எழும்பூரில் இருந்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பனாரஸுக்கு செல்லும் இந்த ரயிலில் 105 பேர் பயணிக்கின்றனர்.
தமிழகத்துக்கும் காசிக்கும் (வாரணாசி) இடையிலான தொன்மையான நாகரிக, பண்பாட்டு மற்றும் அறிவுசார் தொடர்புகளைக் கொண்டாடவும், மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, மத்திய கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு தேசிய கலாச்சார நிகழ்ச்சியாகும். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற முன்னெடுப்பின் கீழ் இது ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில் காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சி நவ.28-ம் தேதி முதல் டிச.12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘திருக்குறள் பயில்வோம் - திருக்குறள் அப்யாஸ் கரேன்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் என 7 பிரிவுகளில் சுமார் 1,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக, தமிழகத்தில் இருந்து பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முதல் ரயில் கன்னியாகுமரியில் இருந்து பனாரஸுக்கு நவ.25-ம் தேதி மதியம் புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயிலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 105 பேர் பயணிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகர், சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் செந்தில்குமார் தெற்கு ரயில்வே பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, மாணவப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அர்லேகர் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைப் புதுப்பித்து உறுதிப்படுத்தும் இந்த முன்னெடுப்பில் பங்கேற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
காசி தமிழ் சங்கம் நிகழ்வுக்கான 207 பேர் அடங்கிய முதல் குழுவில் (105 பிரதிநிதிகள் சென்னை எழும்பூரில் இருந்து பயணித்தனர்) உள்ளனர். இந்த ரயில் வெள்ளிக்கிழமை பனாரஸை சென்றடைய உள்ளது.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, செய்தியாளர்களிடம் கூறியது: “காசி தமிழ் சங்கமம் 5.0-விற்கு மாணவர்கள் செல்ல இருக்கிறார்கள். இந்த மாணவர்களுடன் 100 ஆசிரியர்கள் காசி மற்றும் வாரணாசிக்கு சென்று அங்கு இருக்கக் கூடிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் கற்றுக்கொடுக்க உள்ளனர்.
கடந்த 4 முறையும் ஒரு குழு இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் இருந்தது. கடந்த ஆண்டு அகஸ்தியரை பற்றி ஒரு குழு கற்றுக் கொடுத்தார்கள். இந்த ஆண்டு திருக்குறளைப் பற்றி கற்று கொடுக்கப் போகிறார்கள்.
திருக்குறளைப் பற்றி பிரதமர் பெருமையாக பல இடங்களில் பேசியுள்ளார். ரஷ்ய பிரதமர் புதினிடம் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பை பிரதமர் மோடி பரிசளித்தார்.அதேபோல, திருக்குறள் மீது பிரதமருக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது.இதுவே எங்களுக்கு இந்த ஆண்டு திருக்குறளை தேர்ந்தெடுப்பதற்கு உந்துதலாக இருந்தது.
2047 "உன்னத பாரதம்" தான் பிரதம மந்திரியின் கனவு. அதில் நாட்டில் இருக்கக்கூடிய பெரிய தலைவர்களாக இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பதே அந்த கனவு.
எனவே, அந்த இளைஞர்களுக்கு திருக்குறளை பற்றி ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும், திருக்குறள் சொல்வது போல, ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும், அதில் கூறியபோல நல்ல கருத்துகளை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்னும் பெரிய எண்ணத்தோடு இந்த காசி தமிழ் சங்கமும் 5.0 வியாழக்கிழமை தொடங்குகிறது” என்று அவர் கூறினார்.