சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்-5.0' முன்னோட்ட விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு ஐஐடி இயக்குநர் வி.காமகோடி நினைவுப்பரிசு வழங்கினார். உடன் (இடமிருந்து) தொழிலதிபர் நல்லி குப்புசாமி, மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகரன், ஐஆர்சிடிசி குழு பொது மேலாளர் பி.ராஜலிங்கம் பாசு ஆகியோர் உள்ளனர்.
சென்னை: தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்புகள் இருந்து வருவதாக ‘காசி தமிழ்ச் சங்கமம்-5-0' அறிமுக விழாவில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்துக்கும், வட இந்தியாவில் உள்ள காசிக்கும் இடையிலான பண்பாட்டு தொடர்புகளை பலப்படுத்தும் வகையில் சென்னை ஐஐடி சார்பில் ‘காசி தமிழ்ச் சங்கமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காசி தமிழ்ச் சங்கமம் 5.0 என்ற பெயரில் இந்த ஆண்டு 5-வது ஆண்டாக நவ. 28 முதல் முதல் டிச. 12 வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பேசியதாவது: தேச ஒருமைப்பாட்டை மேம்படுத்தக்கூடிய செயல்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அந்த வகையில்தான் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய மக்கள் அனைவரும் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு, புவியியல் ரீதியாக ஒருவருக் கொருவர் தொடர்புடையவர்கள். காசி - தமிழகம் இடையே கலாச்சார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் தொன்றுதொட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருந்து வருகிறது.
அந்த தொடர்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகம் காசியுடன் மட்டுமல்ல; சவுராஷ்டிரம், மகாராஷ்டிரம், ஒடிஷாவுடனும் நீண்ட காலமாக கலாச்சார தொடர்புகளை வைத்துள்ளது.
இந்த கலாச்சார தொடர்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் இவ்வாறு ஆளுநர் பேசினார். ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, ‘‘ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் பிரதமர் மோடியின் தொலை நோக்கு திட்டத்தின் கீழ் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2022 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் ‘திருக்குறள் பயில்வோம்’ என்பதாகும்.
நவ.28 முதல் டிச.12 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்கள், ஆன்மிகபிரமுகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் 1500 பேர் காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 1000 கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரை உருவாக்க அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பெல்லோஷிப் வழங்க முடிவுசெய்துள்ளோம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஐஆர்சிடிசி குழு பொது மேலாளர் பி.ராஜலிங்கம் பாசு, மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நவ.13 வரை முன்பதிவு செய்யலாம்
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு (www.kashitamil.iitm.ac.in) அக்.15-ம் தேதி தொடங்கியது. நவ.13-ம் தேதி கடைசிநாள்.
திருக்குறள் மற்றும் காசி தொடர் பான தேர்வு, தொலைபேசி நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டு காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அவர்கள், காசி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்கள், பண்பாட்டு மையங்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களைப் பார்வையிடுவார்கள்.