சென்னை: தவெக அரசின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்களின் திருத்தச் சட்டம் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 12 மசோதாக்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மே 11 முதல் 13-ம் தேதி வரையும், ஜூன் 18 முதல் 23-ம் தேதி வரையும், 2-வது கூட்டம் ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரையும் நடைபெற்றது.
இதில் ஆளுநர் உரை, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய ப்பட்டு, தொடர்ந்து அவற்றின் மீதான விவாதமும் நடத் தப்பட்டது. மேலும், சட்டப் பேரவையில் மொத்தம் 13 மசோதாக்களும், 9 அரசினர் தனித் தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி மசோதா: அதன்படி வேளாண் விளைப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் வகையில், மண்டி உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தல், டிஎன்பிஎஸ்சி கூடுதல் செயல் பணிகள் திருத்தச் சட்டம், தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்
படுத்தல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம், டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்புக் கூட்டு வரி, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம், நகர் ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்தச் சட்டம், ஜிஎஸ்டி வரி திருத்தச் சட்டங்கள், தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக் காலம் நீட்டிப்பு உட்பட 13 மசோதாக்கள் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
இவற்றில் 12 மசோதாக் களுக்குக் கூட்டத்தொடர் முடிந்த 5 நாட்களுக்குள்ளாகவே தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்த மசோதா மட்டும் இறுதி முடிவுக்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த செப்டம்பர் 15-ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளன.
இதையடுத்து தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்தச் சட்டத்தின்படி இனி எம்எல்ஏக்கள், தொகுதிகளில் திறம்பட பணியாற்ற வாக னம், மாதாந்திர வாகனப் படித் தொகை ரூ.75 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், தனி உதவியாளர் படித்தொகையாக ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும். அதேபோல், புதிய சட்டத்தின்படி நிலமாற்றம் செய்வதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்குப் பதில், நகர ஊரமைப்பு இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட் டங்களைத் தவிர்த்து மற்ற 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக் காலம் அக்டோபர் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கூடுதல் செயல் பணிகள் சட்டத்தின்படி தமிழகத்தில் சென்னை உட்பட 25 மாநகராட்சிகள், 142 நக ராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உள்ள அனைத்துவித பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
தனியார் பல்கலை. மசோதா: அதேநேரம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட தனியார் பல்கலைக் கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட போது அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதில், தமிழகத்தில் தனியார் பல்கலைக் கழகம் தொடங்குவது சென்னை மாநகராட்சி பகுதியாக இருந்தால் 12 ஏக்கருக்குக் குறையாமலோ, பிற மாநகராட்சி, நகராட்சி பகுதிக்குள் இருந்தால் 18 ஏக்கருக்குக் குறையாமலோ, இதர பகுதிகளில் அமைந்திருந்தால் 25 ஏக்கருக்குக் குறையாமலோ நிலம் இருத்தல் வேண்டும். அதே போல், பல்கலைக்கழகத்துக் கான குறைந்தபட்ச அறக்கட்டளை நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாகக் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.