சென்னை: போதை இல்லா தமிழகத்தை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஆளுநர், தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: போதை பழக்கம் என்பது தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும், சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியது.
போதை இல்லாத சமூகத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்போம். போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் ஒன்றிணைந்து போதையில்லா ஆரோக்கியமான, வலிமையான, வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில், போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.
இளைஞர்களின் கனவுகளை காக்கவும், நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் இந்த போதைப்பொருட்களை அழிப்பதற்கு பாடுபடுவோம்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: அண்மைக்காலமாக போதைப்பொருள் பழக்கத்தால் பல இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.
இளமைக்காலம் போதையில் வீழ்ந்தால், எதிர்காலம் இருளில் மூழ்கும். எனவே, போதை இல்லாத வளமான தமிழகம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்.
இளைஞர்கள் போதைப்பொருள் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி, ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை உறுதிசெய்வோம்.