சென்னை: யுகாதித் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: யுகாதி, குடி பட்வா, வசந்த நவராத்திரி மற்றும் சேட்டி சந்த் ஆகிய புனிதமான திருநாட்களை கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகைகள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளத்தை வழங்கி, நமது நாட்டை தன்னிறைவு பெற்ற பாரதமாக உருவாக்கும் பாதையில் முன்னேற்றட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் வாழும் மொழி சிறுபான்மையின மக்களுக்கு என்றும் காவலரணாக இருந்து, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளை பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்தி ஆதிக்கத்தையும், திணிப்பையும் வீழ்த்த வேண்டும். மாநில சுயாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் இயக்கம் திமுக.
அண்மை காலங்களில் வரிப் பகிர்வில் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் நமது வலிமையை குறைக்க நடக்கும் சதி, திராவிடப் பண்பாட்டை மதிக்காத பாஜக அரசின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக நம் ஒற்றுமை தொடரவும், வலுப்பெறவும் இந்நாளில் உறுதியேற்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யுகாதி பண்டிகையை உவகையுடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் என்றிருந்தாலும், இந்தியர் என்ற சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத துவேஷம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.