செந்தில் பாலாஜி
சென்னை: செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
எனினும், அவர் முன்னாள் அமைச்சர் என்பதால், விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி அவசியம். அந்த வகையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சியின் போது, ஆளுநரின் ஒப்புதல் கோரி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில அரசு மூலமாகவே ஆளுநருக்கு மனு அனுப்ப வேண்டும் என கூறி கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு அனுமதி கோரி தலைமைச் செயலருக்கு அமலாக்கத் துறை மே 15-ல் கடிதம் எழுதியது. இதையடுத்து, செந்தில் பாலாஜி மீதான புகாரில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய ஆளுநரின் அனுமதியை தவெக அரசு கோரியுள்ளது. முதல்வர் விஜய் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.