திருமாவளவன் | கோப்புப் படம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தி மதுரையில் மதநல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, பேரணிக்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதன் மூலம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. அதில் அரசு உறுதியாக இருக்கும். நீதிமன்ற உத்தரவை மதிப்பதால்தான் சீராய்வுக்கு சென்றுள்ளோம். இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாக வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.
உச்ச நீதிமன்றத்தைவிடவும் தமிழக வரலாற்று பின்னணியை தமிழக அரசு அறிந்து வைத்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் விவாதம் நடக்கிறது. குறுஞ்செய்தி உண்மைதான் என ஆட்சியர் துணிந்து சொல்ல வேண்டும். உண்மை இதுதான், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சொல்ல வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.