சென்னை: சட்டப்பேரவையில் 2026–27-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது கடன் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணத்துக்காக ஆண் பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம், பெண் பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் திருமண கடனாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதுநிலைக் கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் திருமணக் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்துக் கோயில் பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையானது அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி, 36 மாதத்தவணைகளில் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.