அமைச்சர் அருண்ராஜ்

 
தமிழகம்

‘கூடுதல் பிரசவங்களை கையாள அரசு மருத்துவமனைகள் தயார்’: அமைச்சர் அருண்ராஜ்

தமிழினி

சென்னை: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதை கையாள்வதற்குத் தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும், போதிய மருத்துவப் பணியாளர்களும் தயாராக உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது சுகாதார கட்டமைப்பில் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் விரிவான நலத்திட்டங்களின் மூலமாக மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பராமரிப்பில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் 2015 – 2016 ஆண்டு முதல் 2025 - 2026 ஆண்டு வரை நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக 2015 - 2016 ஆம் ஆண்டு 9.47 இலட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 6.31 லட்சம் பிரசவங்கள் (67%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.

ஆனால், தமிழகத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கை 7.80 லட்சமாக குறைந்துள்ளது. இவற்றில் 4.15 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.

தமிழகத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இனிவரும் ஆண்டுகளில் சுமார் 6.31 லட்சம் (80%) பிரசவங்கள் வரை கையாளக்கூடிய திறன் அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளது என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடும்போது தெளிவாக தெரிய வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை கையாளத் தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர எந்நிலையிலும் குறைக்கப்படவில்லை.

மேலும், 130 பிரத்தியேக சீமாங் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்பட்ட விரிவான அவசரக்கால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் உள்ளன என்பது இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக மருத்துவரணிச் செயலாளர் டாக்டர் எழிலன் கூறும்போது, ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தால் மக்கள் அனைவருமே அரசு மருத்துவமனையை நோக்கிப் பிரசவத்துக்காக வரக்கூடும்.

ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கூடுதல் எண்ணிக்கையிலான பேஷன்ட்டுகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்க முடியும்.

மருத்துவக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி, மருத்துவ ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும் செய்யவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை.’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT