மதுரை: கள்ளழகர் கோயிலில் ரூ.40 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்வது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
மதுரை அழகர்கோயிலில் வணிக நோக்கில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி மேலூர் வெள்ளரிப்பட்டி பிரபு, நாகை திருக்கணாபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து தீர்ப்பை தள்ளிவைத்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கள்ளழகர் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது. எனவே, அழகர்கோயில் நிதி ரூ.40 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு பிறப்பித்த அரசாணை ரத்துசெய்யப்படுகிறது. கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாக குறைந்துள்ளது. கோயில் தணிக்கை விவரங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
அழகர் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழுவை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தால், அவரை நீக்கிவிட்டு, நிர்வாகம் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும். கோயிலின் தற்போதைய நிலப்பரப்பிலும், 1925-ம் ஆண்டு தலபுராணத்தில் உள்ள வரைபடத்திலும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளும், கோயிலின் நெறிமுறைகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
கள்ளழகர் கோயிலில் மறுசீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பழைய நினைவுச் சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். அழகர்கோயிலில் பிராணிகளை பலியிடும் வழக்கத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. கோயிலின் அக்னி புஷ்கரணிக்கு அருகில் பணியாளர் குடியிருப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது.
அந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை, அரசு கோயில் நிர்வாகத்துக்கு திரும்ப வழங்க வேண்டும். புனித தீர்த்தத்துக்கு அருகில் கட்டுமானங்களை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தது வேதனையானது.
கோயில்களில் நடைபெறும் வளர்ச்சி நடவடிக்கைகளை விதிமுறைகளைப் பின்பற்றி, பழமை மாறாலும், தெய்வீக அழகைப் பாதுகாக்கும் வகையிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.