சென்னை: தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைதான உமா சங்கர் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியவுடன், தனது கடைசி படம் என அறிவித்து நடித்த ‘ஜனநாயகன்’ படம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி, சென்சார் போர்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் திருட்டுத்தனமாக சிலரால் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களில் ஃபிரிலான்ஸ் எடிட்டர் என கைது செய்யப்பட்ட உமாசங்கர் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 30-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உமாசங்கரின் சகோதரி ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் படம் வெளியவதற்கு முன்பே படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டதில் உமா சங்கருக்கு முக்கிய பங்கு உள்ளதால், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது.
ரேணுகாதேவி தரப்பில் தனது சகோதரர் தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறாரே தவிர, சினிமா தொடர்புடைய படத்தொகுப்பு பணி எதிலும் இல்லை; காவல் ஆணையர் மனதை செலுத்தாமல், இயந்திர தனமாக சகோதரரை தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் குண்டர் தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், ஜனநாயகன் படக் கசிவு விவகாரத்தில் உமா சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.