

பெரம்பலூர்: வேப்பந்தட்டையில் மஞ்சள் பயிர் பாதிக்கப்பட்ட இடங்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆட்சியருக்கு அறிக்கை அளித்துள்ளனர். விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர், குடிகாடு, தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், எசனை, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், வேப்பந்தட்டை வடக்கு, வேப்பந்தட்டை தெற்கு, பூலாம்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டது. போதிய மழை இன்மை மற்றும் எல் நினோ வெப்ப அலை காரணமாக ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, மஞ்சள் பயிர்கள் கருகி, பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
இதனால் மஞ்சள் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தை பொங்கலையொட்டி அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள், மஞ்சள் பயிர்கள் பாதிப்பால் வேதனை அடைந்தனர்.
இதனால் பொங்கலுக்கு மஞ்சள் கிடைப்பது கடினம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்த பாதிப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த இழப்பீட்டை ஈடு செய்ய மாநில அரசு தோட்டடக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் ஆன்லைனில் செய்திகள் வெளியானது.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தியாகராஜன், உதவி இயக்குநர் பிரவீன், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர், வேளாண் துறை அலுவலர் ஆகியோர் நேற்று வேப்பந்தட்டையில் மஞ்சள் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் எல் நினோ வெப்ப அலை மற்றும் பருவ மழை பொய்த்துப்போனதின் காரணமாக மஞ்சள் பயிர்கள் கருகியது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரவீன் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டம் உள்பட சில இடங்களில் மஞ்சள் பயிர் கருகி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டோம். முதற்கட்டமாக அனுக்கூர், வாலிகண்டபுரம், நெய்குப்பை, அன்னமங்கலம், வேப்பந்தட்டை வடக்கு, வேப்பந்தட்டை தெற்கு, பூலாம்பாடி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
125 விவசாய நிலங்களில் நடத்திய ஆய்வில் முதற்கட்டமாக 87 ஏக்கர் மஞ்சள் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இன்னும் சில இடங்களில் பாதிப்புகள் உள்ளது. ஆய்வு அறிக்கையை ஆட்சியர் மற்றும் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். இதையடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அரசு உத்தரவிட்டால் அடுத்தக்கட்டமாக மீண்டும் ஆய்வு நடத்தப்படும். பின்னர், பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்,” என்று தெரிவித்தார்.