பழநி: பழநி முருகன் கோயிலில் தங்க ரதப் புறப்பாடு கட்டணத்தை ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500-ஆக திடீரென உயர்த்தியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெறுகிறது. ரூ.2,000 செலுத்தினால் 3 பேர் தங்க ரதம் இழுக்கவும், 5 பேர் சிறப்பு தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தங்க ரதம் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத தொகுப்பு வழங்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 முதல் 100 பக்தர்களும், விசேஷ நாட்களில் ஒரு நாளைக்கு 200 முதல் 400 பக்தர்கள் வரை தங்க ரதம் இழுத்து வழிபடுகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக தங்கரதம் இழுப்பதற்கான கட்டணம் உயர்த்தபடவில்லை. இந்நிலையில் விலைவாசி உயர்வு, தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு தரமான பிரசாத பொருட்களை வழங்கவும், கோயிலுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் தங்கரதப் புறப்பாடு கட்டணத்தை ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஜூலை மாதம் பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாகம் கருத்து கேட்டது.
பலரும் கட்டண உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் நேற்று (நவ.1) முதல் திடீரென தங்கரதப் புறப்பாடு கட்டணம் ரூ.2,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முதல் பிரசாதங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்ட தேவஸ்தானம், தங்கரத கட்டண உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் இந்த திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பக்தர்கள் கூறுகின்றனர்.