சாயல்குடி அருகே பறிமுதலான நகைகள் முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.9.47 கோடி மதிப்பிலான தங்க வைர, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதுகுளத்தூர் தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையிலான பறக்கும் படையினர் சாயல்குடி அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கன்னிராஜபுரம் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி சாலை வழியாக திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ராஜா (36) என்பவர் காரில் வந்தார். காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதில் 18 பெட்டிகளில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருந்தன.
விசாரணையில் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நகைகள் என்றும், ஆர்டரின் பேரில் எடுத்துச் செல்வதாகவும் கூறினார்.
ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.9.47 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.