புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பால் 19 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.203 அதிகரித்து ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய எரிப்பொருட்களின் விலையை முன்னணி எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) ஆகியவை ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் மாற்றியமைக்கின்றன.
கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட நட்பு நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளிக்கிறது. இதனால் ஹார்முஸ் கடல் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் காத்துக் கிடக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி காஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 7-ம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்டது. அதன்பின் மாற்றம் செய்யப்படவிலை. ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ.195.50 உயர்த்தப்பட்டு ரூ.2,078.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ரூ.2,031-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.218 உயர்ந்து ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.203 உயர்ந்து ரூ.2,2,46-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறியளவில் உணவகங்கள் வைத்திருக்கும் பலர் கள்ளச் சந்தையில் வர்த்தக சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். அவற்றின் விலை கள்ளச்சந்தையில் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை உயர்ந்துள்ளது. 5 கிலோ எடையுள்ள சிறிய காஸ் சிலிண்டரின் விலையும் ரூ.51 உயர்ந்துள்ளது.
பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உயர்த்தியுள்ளது. டெல்லியில் எக்ஸ்பி 100 பெட்ரோலின் விலை ரூ.149-லிருந்து ரூ.160-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் ரூ.91.49-லிருந்து ரூ.92.99-ஆக உயர்ந்துள்ளது.
சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தாலும், அதற்கு நிகராக இவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. அதற்கு பதில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி லிட்டருக்கு ரூ.10 குறைத்தது.
விமான எரிபொருள்: விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டர் ரூ.96,638.14-லிருந்து ரூ.2,07,341.22 ஆக உயர்த்தப்பட்டது. விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2 லட்சத்தை தாண்டியது இதுவே முதல்முறை. பின்னர் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மட்டும் 1 கிலோ லிட்டர் விலை ரூ.1,04,927 ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரான் மீதான போர் எப்போது நிற்கும் என்று தெரியவில்லை. போர் நின்றாலும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனிமேல் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது. இதனால் உள்நாட்டில் எரிபொருட்களின் விலை குறையுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்வு: மேற்கு ஆசியா போர் காரணமாக உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலையும் 2 மடங்குகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கான விமான டிக்கெட் கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்துவதற்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு தளர்த்தியதால், விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. குறிப்பாக உள்நாட்டு விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
அதன்படி ஜனவரி மாதத்தில் சென்னை - தூத்துக்குடி இடையே இருந்த குறைந்தபட்ச விமானக் கட்டணம் ரூ.3,608. இப்போது குறைந்தபட்ச விமானக் கட்டணம் ரூ.6,503. சென்னை - மதுரைக்கு ரூ.3,129 ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.5,467 ஆகவும், சென்னை - திருச்சிக்கு ரூ.3,608 ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.4,521 ஆகவும், சென்னை - கோவைக்கு ரூ.4,351 ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.4,966 ஆகவும், சென்னை - டெல்லிக்கு ரூ.5,933 ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.6,496 ஆகவும், சென்னை - மும்பைக்கு ரூ.3,356 ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.4,020 ஆகவும், சென்னை - கொல்கத்தாவுக்கு ரூ.5,293 ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.6,047 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்குள் இயக்கப்படும் விமானங்களில் கட்டண உயர்வு அதிகமாகவும், சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் கட்டண உயர்வு ஓரளவு குறைவாகவும் உள்ளது. பழைய கட்டணங்களில் டிக்கெட்களை முன்பதிவு செய்தவர்கள், போர்டிங் பாஸ் வாங்குவதற்கு முன்பாக கூடுதல் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.