ஜி.கே. வாசன்

 
தமிழகம்

“மின் கட்டண உயர்வை யாரும் ஏற்கத் தயாராக இல்லை” - ஜி.கே.வாசன்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவது தவெக அரசின் கடமை. ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் அரசியல் சுதந்திரம் உள்ளது. எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதற்கு தடை விதிக்க முடியாது” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மேலும், “மின் கட்டண உயர்வை யாரும் ஏற்கத் தயாராக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

சிவகங்கையில் தமாகா நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்ளிடம் அவர் கூறியது: “தவெக அரசு அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லை. பாரபட்சமின்றி அனைத்து விவசாயகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளிடம் பேசி அவர்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

கர்நாடக முதல்வர் மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருக்கிறார். அது காவிரி டெல்டா விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். மேகேதாட்டு அணை கட்ட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. மின் கட்டண உயர்வு இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், கோடைக் காலத்தில் மின்வெட்டு இல்லாத சூழலை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.

தற்போது பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, பாலியல் குற்றங்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவங்களுக்கு காவல் துறையும், அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கால அவகாசம் கேட்கக் கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பு கொடுக்க கூடாது.

சமூகச் சீர்கேடுகளுக்கு போதைப்பொருள், மதுப் பழக்கமே காரணமாக உள்ளன. அவற்றின் விற்பனை, பயன்பாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் கடன் சுமையை கட்டுப்படுத்துவதோடு, வருவாயையும் அதிகரிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவது தவெக அரசின் கடமை.

ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் அரசியல் சுதந்திரம் உள்ளது. எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதற்கு தடை விதிக்க முடியாது.

தமாகா தங்களது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையை உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின் கருத்துகளையும் அதிகாரிகள் கேட்டு, அச்சங்களை போக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT