கோப்புப் படம்
ஈரோட்டில், தமாகா சார்பில் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், காமராஜர் மக்கள் கட்சி வரும் 20-ம் தேதி இணைகிறது. கட்சி இணைப்பு விழா 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் கூட்டமாக நடைபெறவுள்ளது. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழருவி மணியன் தனது கட்சியை, தமாகாவில் இணைப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் திமுக சிறுபான்மை மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல். இதேபோல, தேர்தலுக்கான அரசியல் ஆதாயத்துக்காக மகளிர் உரிமைத் தொகை, விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வாக்கு வங்கி அரசியல்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் களமாக்க திமுக மாற்றுகிறது. திமுக கூட்டாட்சிதத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது. மக்களுக்கான திட்டங்களுக்கு திமுக அரசு தடையாக உள்ளது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்மறை வாக்குகளை தடுப்பதற்கான சூழ்ச்சி.
வாக்கு வங்கியை வாங்கிக் கொண்டு 5 ஆண்டுகள் மக்களின் பணத்தைச் சுரண்டுவது வழக்கமாகிவிட்டது. பெண்கள் விழித்துக் கொள்ளவேண்டும்.தோல்வி பயத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழக அரசிடம், வாக்காளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகத்தில், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. தேசியஜனநாயகக்கூட்டணி வெல்வதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது.
கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பதற்கு நேரம், காலம் உள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ளவர்களும் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கிறோம். பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றார்.