சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் “60 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி - அரசியல் மாற்றம் மக்களின் எண்ண ஓட்டம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை: வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமாகா சார்பில் 60 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி - அரசியல் மாற்றம் மக்களின் எண்ண ஓட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கம், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த கருத்தரங்கில் ஊழலற்ற நிர்வாகம் என்று கட்சியின் மாநில துணை தலைவர் விடியல் எஸ்.சேகர், வெளிப்படை தன்மை என்று மாநில துணை தலைவர் ஏ.எஸ்.முனவர் பாட்சா, இளைஞர்களின் சக்தி என்று மாநில பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன், சாமானியர்களும் சாதித்த தேர்தல் என்று கொள்கை பரப்பு செயலாளர் கே.ஆர்.டி.ரமேஷ் ஆகியோர் பேசினர்.
இறுதியாக, ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி வர வேண்டும். கல்வி, தொழில், விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.
குறிப்பாக, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து நாம் வலியுறுத்துவோம். காமராஜர், மூப்பனார் என்றாலே நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தான். ஆனால், கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அவை எதுவும் இல்லை. சுயநலம்தான் இருந்தது. பொது நலம் இல்லை.
தவெக ஆட்சி வந்த பிறகு ஊழல் குறைந்து கொண்டிருக்கிறது. குறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெளிப்படைத் தன்மை உள்ளது. நல்ல பணிகளை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பாலமாக தமாகா தொடர்ந்து செயல்படும். மக்களின் எண்ணங்களை ஆட்சியாளர்கள் பிரதிபலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யாருக்கு ஆதரவு? - மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி உறுதியாகியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டது. அதே கூட்டணியில் தேர்தலை சந்தித்த தமாகா, இடைத்தேர்தல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது.