தமிழகம்

12 தொகுதிகளை கேட்கும் ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயக கூட்டணியில் பல ஆண்டுகளாக தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமாகா தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் தமாகா 6 இடங்களில் போட்டியிட்டது.

அடுத்து 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 இடங்களில் தமாகா நின்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டு, 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோரிடம் தமாகா கொடுத்துள்ளது.

          

இதுதொடர்பாக தமாகா மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தமாகா பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி, போட்டியிடும் அனைத்து இடங்களில் பொதுவான தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால், குறைந்தது 12 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்.

அப்போது தான் பொதுவான ஒரு சின்னம் கிடைக்கும். இல்லையென்றால், ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்படும். அதனால் தான், 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்து, 12 தொகுதிகளை கேட்டு இருக்கிறோம்” என்றனர்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம்.ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும். எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது எல்லாம் உறுதி செய்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அத்தனை கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT