கிரிஷ் சோடங்கர்

 
தமிழகம்

இன்று சென்னை வருகிறார் கிரிஷ் சோடங்கர்

தேர்தலுக்காக 5 குழுக்களை அமைத்தது காங்கிரஸ்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "வெல்ல முடியாத சில தொகுதிகளை திமுக அடையாளம் கண்டுள்ளது. அதில் நமது சில சிட்டிங் தொகுதிகளும் அடங்கும். எனவே, அவர்கள் பரிந்துரைக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தான் நாம் ஜெயிக்க முடியும்" என சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

          

பிறகு மூத்த தலைவர்கள் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை கிரிஷ் சோடங்கரிடம் வழங்கினர். அந்த பட்டியலை எடுத்துக்கொண்டு டெல்லி சென்ற கிரிஷ் சோடங்கர், ராகுல் காந்தியிடம் பட்டியலை ஒப்படைத்தார். பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இப்படியான ஒரு பரபரப்பான சூழலில்தான், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருகிறார். ராகுல் காந்தி வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை கிரிஷ் சோடங்கர் இன்று இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 குழுக்கள் அமைப்பு: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாநில தேர்தல் குழு, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராஜேஷ்குமார், கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி உட்பட மொத்தம் 37 பேர் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் செல்லக்குமார் தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மொத்தம் 51 பேர் உள்ளனர். காங்கிரஸின் விளம்பரம், ஊடக மேலாண்மை குழு தலைவராக விஜய் வசந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் மேலாண்மை- ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT