தமிழகம்

“தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு ‘ஜஸ்ட் பாஸ்’ மார்க் தான்” - எல்.கே.சுதீஷ் எம்.பி

வ.செந்தில்குமார்

வேலூர்: தவெகவின் நூறு நாள் ஆட்சிக்கு 35 மார்க்குடன் ‘ஜஸ்ட் பாஸ்’ தான் அளிக்கப்படும் என்று தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் இன்று ஆட்சியர் லீலா அலெக்சை சந்தித்து பேசினார். அப்போது, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியில் இருந்து பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி வீதம் வேலூர் மாவட்டத்துக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நிதி வழங்க உள்ளேன். ஆறாவது ஆண்டுக்கான நிதியை விருத்தாச்சலம் தொகுதிக்கு வழங்கவுள்ளேன். இதில், பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி, குடிநீர் திட்டங்கள், பேருந்து நிறுத்தங்கள் உட்பட பணிகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன்.

வேலூர் விமான நிலையம் திறப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து பேசியபோது எல்லா அதிகாரிகளும் உடனிருந்தனர். வேலூர் விமான நிலையம் 98 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

வேலூர் விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தேன். அதற்கு, அவர் கூடுதலாக 100 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் வாங்கிக் கொடுக்குமாறு தெரிவித்தார். இதுகுறித்து, தமிழக முதல்வரிடம் பேச அனுமதி கேட்டுள்ளேன். விரைவில் அனுமதி கிடைத்தால் வேலூர் விமான நிலையம் விரிவாக்கம் குறித்து முதல்வரிடம் பேசுவேன்.

வேலூர் கோட்டையில் ஒலி, ஒளி கண்காட்சி அமைப்பது குறித்து மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர், என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கை கடிதம் கிடைத்ததும் மத்திய அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அளவில் 2029-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவதற்கான கால நேரம் இன்னும் இருக்கிறது.

முதலில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்குமா என்று பார்க்க வேண்டும். தேசிய அளவில் மோடியும், ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். வேறு யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் முதல்வரை தெரியுமா? என தெரியவில்லை. இந்தியா ஒரு பெரிய நாடு. தவெகவின் நூறு நாள் ஆட்சி ‘ஜஸ்ட் பாஸ்’தான். 35 மார்க் மட்டும் அளிக்க முடியும்.

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மட்டும் பேசுவது குறித்த எங்கள் பொதுச்செயலாளர் பேசியுள்ளார். நாங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுகின்றோம். அனுபவம் இல்லாத நிலையில் 3 மாதங்கள் அவர்களுக்கு நேரம் கொடுத்துள்ளனர். இனி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பேச வேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மற்ற அமைச்சர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கான சம்பள உயர்வை வரவேற்கிறேன். வேலூர் மாவட்டத்தில் கேந்திரியா வித்யாலயா பள்ளி கொண்டுவருவது குறித்து பேசப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT