சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.868.50-ல் இருந்து ரூ.928.50 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுதவிர, எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘கெயில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.868.50-ல் இருந்து ரூ.928.50 ஆக அதிகரித்துள்ளது.
கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களிலும் இதேபோல விலை உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,929-ல் இருந்து ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்வால், உணவுப் பொருட்கள் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, ஒற்றை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்ததில் இருந்து 21 நாட்களுக்கு பிறகும், இரட்டை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 30 நாட்களுக்கு பிறகும் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2025 ஏப்ரலில் இருந்து சிலிண்டர் விலை மாறாமல் இருந்தது. தற்போது, வளைகுடா போர் எதிரொலியாக, ஓராண்டுக்குப் பிறகு விலை உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு கடந்த 6-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகுதான் அமலுக்கு வந்தது. அதுவரை சிலிண்டர் விலை ரூ.865.50 ஆகவே இருந்தது.
இந்த நிலையில், 6-ம் தேதிக்கு முன்பாகவே சிலிண்டர் முன்பதிவு செய்து, அதற்கான கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தியவர்களுக்கு சிலிண்டர் நேற்று டெலிவரி செய்யப்பட்டது. ஆனால், அவர்களிடமும் கூடுதலாக ரூ.60 வசூலிக்கப்பட்டது.
‘சிலிண்டரை நிரப்புவதற்கான கட்டணம் ரூ.60 உயர்ந்திருப்ப தால், மேலும் ரூ.60 செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் காஸ் ஏஜென்சிகள் ரசீதுகளை வழங்கியுள்ளன. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடடம் கேட்டபோது, ‘‘சிலிண்டர் டெலிவரி செய்யும்போது என்ன விலையோ, அதுதான் வசூலிக்கப்படும்’’ என்றனர்.
இதற்கிடையே, சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ‘வளைகுடா போர்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ‘போரின் தாக்கம் நீண்ட காலம் இருக்காது.
விரைவாக இயல்பு நிலை திரும்பிவிடும்’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தற்காலிகமாக இந்த விலை உயர்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்ப பெற வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியபோது, ‘‘நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சமையல் எரிவாயு பயன்பாடு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதியும் அதிகரித்துள் ளது. சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்க இயலாமல் போகிறது’ என்று தெரிவித்தார்.