படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

தூய்மைப் பணியாளர்கள் போனஸ் கேட்டு போராட்டம்: புதுச்சேரி நகர் முழுவதும் தேங்கிய குப்பைகள்

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குப்பைகளை அகற்ற, சுத்தம் செய்ய அரசு - தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

ஆனால், தூய்மை பணியாளர்களுக்கு போனஸ், அட்வான்ஸ் உட்பட எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. தங்களுக்கு போனஸ், அட்வான்ஸ் வழங்காததை கண்டித்தும், உடனே அவற்றை வழங்க கோரிக்கை விடுத்து தூய்மை பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி நகரெங்கும் பட்டாசு குப்பைகள், கழிவுகள் தேங்கியுள்ளன. இந்நேரத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பை தொட்டிகளில் மலைபோல குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மழை பெய்ததாலும், கால்நடைகள் குப்பைகளை கிளறியதாலும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் ஏஐடியுசி புதுச்சேரி மாநிலக்குழுவின் தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுச்சேரிக்கு தினசரி அண்டை மாநிலமான தமிழக உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வியாபாரம், சுற்றுலா என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்கு , சுத்தம் செய்ய தினமும் இரவு, பகல் பாராமல் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு புதுச்சேரி அரசு உரிய ஊதியம், பஞ்சப்படி, விடுப்பு , தீபாவளி போனஸ், பணிக்கொடை, குறைந்த பட்ச ஊதியம், அட்வான்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, உரிமைகளை முறையாக அளிக்கவில்லை.

இதுதொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசை கண்டிக்கிறோம். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ், அட்வான்ஸ் உள்ளிட்டவற்றை உடனடியாக புதுச்சேரி அரசு அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT