திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ரவுடிக்கு மரண தண்டனையும், அவரது கூட்டாளிகள் 2 பேருக்கு சிறை தண்டனையும் விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாநகரைச் சேர்ந்த பெற்றோரை இழந்த, 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தேவாலயத்தில் வர்ணம் பூசும் பணிக்கு வந்த, விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. மாணவிக்கு பெற்றோர் இல்லாததை அறிந்த முனீஸ்வரன், ஆசைவார்த்தை கூறி மாணவியை கீழவீரராகவபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மாணவியை முனீஸ்வரன், அவரது கூட்டாளிகளான கீழவீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி,முருகேசன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொண்டு, அதைக்காட்டி மிரட்டி, தொடர்ந்து வன்கொடுமை செய்துவந்தனர்.
இந்நிலையில், அந்த மாணவியின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில், மாணவியின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று இறுதி தீர்ப்புவழங்கப்பட்டது. இதில் மாணவிக்கு தொடர் பாலியல் சித்தரவதை செய்த சின்னக்குட்டிக்கு மரண தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். சின்னக்குட்டி, முருகேசன் ஆகியோர் மீது ஏற்கெனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர்கள் 2 பேரையும் ரவுடிகள் பட்டியலில் போலீஸார் வைத்துள்ளனர்.
திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த ஆண்டில் மட்டும் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்துள்ளார். மேலும், இந்த நீதிமன்றத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.