சேலம் பாமக பொதுக்குழு இலச்சினையை கவுவரத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். உடன் சேலம் எம்எல்ஏ அருள், மாவட்டச் செயலாளர் புகழேந்தி. | படம்: இரா.தினேஷ்குமார். |

 
தமிழகம்

“என்னை எதிர்த்து அன்புமணி போட்டியிட்டால்...” - ‘ரெடி’ என்கிறார் ஜி.கே.மணி

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

4 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இப்பொதுக்குழுவை அரசியல் கட்சி தலைவர்கள் உற்று நோக்குகின்றனர். இதற்கான பொதுக்குழு இலச்சினையை இங்கு வெளியிடுகிறோம்.

‘இப்படிப்பட்ட பொதுக் குழுவை பாமக தலைமை அறிவிக்கவில்லை’ என அன்பு மணி சொல்லியிருப்பது அநாகரி கமானது. நாடே பாராட்டும் போராளியை (ராமதாஸ்) கொச்சைப் படுத்தி வருகிறார். அன்புமணிக்கு தலைவர் மற்றும் அமைச்சர் பதவி கொடுத்து ஆனந்த கண்ணீர் வடித்த ராமதாஸின் கண்களில், தற்போது வேதனை கண்ணீர் வடிகிறது.

பாமக தலைவராக அன்புமணியின் பதவிக் காலம் 2025-ம் ஆண்டு மே மாதத்துடன் முடிந்த நிலையில், 2023-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரைதலைவராக நீடிக்கிறேன் என போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். தலைவராக இல்லாதவர், ‘நான் தான் கட்சி, நான்தான் தலைவர்’ என சொல்லி வருகிறார்.

பாமகவின் அடையாளம் ராமதாஸ்தான். அன்புமணியை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். ராமதாஸால் உருவாக்கப்பட்டவர்கள், அவரது பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசு வதை கண்டிக்கிறோம். அவரது வயது என்ன..? அனுபவம் என்ன..? பாமக நிறுவனத் தலைவராக இருந்து, கட்சியை ராமதாஸ் வழி நடத்தி வருகிறார்.

2026-ல் வெற்றி கூட்டணியை அமைப்பார். பாமக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும். 100-க்கும் மேற்பட்ட தொகுதியில் பாமக வலிமையாக உள்ளது. அன்புமணியுடன் சென்றவர்கள் வருத்தப்படுகின்றனர், மன உளைச்சலில் உள்ளனர். திரும்பி வருவதற்கு சிலர் எங்களிடம் பேசி வருகின்றனர். ராமதாஸ் கைதான் ஓங்கி இருக்கும்.

தருமபுரியில், ‘ராமதாஸ்தான் ஆணி வேர்’ என்றோம். ‘அவர்தான் ஆல மரம்’ என விழுப்புரத்தில் கூறுகிறோம். கூட்டணி குறித்து பாமகவுடன் எந்த கட்சிகளும் பேசவில்லை. கட்சியில் தற்போது நெருக்கடி உள்ளது.

பாமக வாக்கு வங்கி, ராமதாஸ் பின்னால் உள்ளது. மாம்பழம் சின்னம் ராமதாஸுக்குதான் கிடைக்கும். பாமகவில் உள்ள பிரச்சினை குறித்து இருவரையும் சமாதானப்படுத்த அதிமுக, பாஜக தரப்பில் எதுவும் பேசவில்லை.

சினிமா துறையில் இருப்ப தால் சங்கத் தேர்தலில் தமிழ் குமரனை துணை முதல்வர் உதயநிதி ஆதரித்திருக்கலாம். அது தொழில். சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதியில் அன்புமணி உட்பட யார் போட்டியிட்டாலும் போட்டியிட தயாராக உள்ளேன். நானும், எம்எல்ஏ அருளும் ராமதாஸுடன் இருப்பதால், எங்களை திமுகவின் ஆதரவாளர்கள் என அன்புமணி தரப்பினர் விமர்சிக் கின்றனர்.

இடஒதுக்கீடு போராட் டத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் சிவந்த மண் என்பதால், விழுப்புரத்தில் பாமக பொதுக்குழு இலச்சினையை வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் சேலம் எம்எல்ஏ அருள், மாவட்டச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT