திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ மு. அப்துல்வகாபுக்கு ஆதரவு கேட்டு பேசுவதற்காக கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்.
மண்டபத்துக்குள் கனிமொழி நுழையும்முன் அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது கூடியிருந்த கூட்டத்திலிருந்து ‘வருங்கால முதல்வரே’ என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதை கனிமொழியே எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரது காதுகளுக்கு எட்டியதோ என்னவோ, அங்கிருந்து மண்டபத்துக்கு சென்றுவிட்டார்.
திமுகவில் வாரிசு அரசியல் குறித்து வட்டமிடும் சர்ச்சைகள் முடிந்தபாடில்லை என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் இடையே அதிகார போட்டிக்கான பனிப்போர் நிலவுவதாக திமுக நிர்வாகிகள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
கடந்த வாரத்தில் திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டு ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் இந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரையில் கூட்டத்தை முடித்துக்கொண்டு உதயநிதி சென்னைக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டங்கள் ரத்தானதற்கான காரணம் குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, கட்சியின் தென்மண்டல பொறுப்பாளரான கனிமொழியை அழைக்காமலும், அவருக்கு முக்கியத்துவம் அளிக்காமலும் இளைஞரணி கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் என்பதாலேயே கட்சி தலைமையின் தலையீட்டில் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கடந்த வாரத்தில் கனிமொழி மாநில அரசியலுக்கு திரும்பவுள்ளதாகவும், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்வரை பேச்சு இருந்தது. பட்டியல் வெளியான பின்னர்தான் அந்த பேச்சு நீர்த்துப்போனது.