திருநெல்வேலி: “மத்திய அரசிடம் நிதி பெற்று தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும்” என்று பாமக எம்எல்ஏவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
பசுமைத் தாயகம், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் தாமிரபரணியின் நலன் விரும்பிகளுக்கு பாராட்டு விழா மற்றும் விவசாயிகள் சந்திப்பு விழா திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இன்று நடைபெற்றது.
புதுச்சேரி முன்னாள் அரசு செயலர் சுந்தரேசன் தலைமை வகித்தார். சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.
பாமக பொருளாளர் திலகபாமா, பசுமை தாயகம் ஒருங்கிணைப்பாளர் சீயோன் தங்கராஜ், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சங்கர்மணி, வழக்கறிஞர் ஷகிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை முத்தாலங்குறிச்சி காமராசு தொகுத்து வழங்கினார்.
முன்னதாக, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ஆய்வு செய்த சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக உள்ளது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அதிகமாக தாமிர தாது உள்ளது. காசியில் பார்க்கும் அதே படித்துறையும், மண்டபங்களும் தாமிரபரணியில் உள்ளன. அதனால்தான் இதனை தென்னகத்து காசி என்கின்றனர்.
தாமிரபரணியை அதிகமாக பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நதியில் சாக்கடை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் அதிகமாக கலக்கின்றன. லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், குளிர்பான நிறுவனங்களுக்கு செல்கிறது. சாக்கடை கழிவுகள் கலப்பதால் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. இந்த நதியை பாதுகாக்க வேண்டும்.
ஜெர்மன் நாட்டில் இருந்து ரூ.59 கோடி கடன் வாங்கப்பட்டு, நதியை பாதுகாக்க பயன்படுத்தாமல் 7 கிலோமீட்டர் நீளத்துக்கு நடைமேடை, பூங்கா போன்றவை கட்டப்படுவதாக வரும் தகவலால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நதியில் கட்டுமானங்களை கட்டாமல் அதன் போக்கில் விட வேண்டும். புதர்கள், பூங்கா, கட்டிடங்கள் நதியின் ஓட்டத்துக்கு இடையூறாக இருப்பதால்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடுகிறது.
தாமிரபரணி ஆற்றின் அருகில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என்ற உறுதியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரூ.59 கோடி நிதியை தாமிரபரணி நதியை சீரமைக்க பயன்படுத்த வேண்டும்.
ஆற்றில் கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் தடுக்க பல்வேறு தீர்வுகளை சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் ஆலோசித்து, தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும். நதியை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தாமிரபரணியை பாதுகாக்க ஆயிரம் கோடி நிதியில் திட்டம் தயாராக உள்ளதாக சொல்கிறார்கள். அப்படி திட்டம் இருந்தால் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.
நதியில் கழிவுகளை கலப்போருக்கு தண்டனை, அபராதம் விதிக்க வேண்டும். அந்த அபராத தொகையை நதியை சுத்தமாக்க பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கரைகளை பலப்படுத்தி கழிவுநீர் வருவதை தடுக்க வேண்டும்.
தாமிரபரணியை பாதுகாப்பதில் தன்னார்வர்களின் பங்களிப்பு மட்டும் போதாது. அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் நிதியை பெற்று, தாமிரபரணியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
இந்தியாவின் நீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் தாமிரபரணியை பாதுகாக்க அளித்த பரிந்துரையை செயல்படுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தபோது, இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி கருத்து தெரிவித்தார். அந்த ஆலோசனையின்படி பொது வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம்” என்றார்.