சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற நிதியுதவித் திட்டதை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொகுதிக்கு 10 மகளிர் தொழில்முனைவோர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்தந்த தொகுதி எம்எல்ஏ.க்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதியின் அடிப்படையில் தொழில் முதலீட்டுக் கழகத்தால் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
இந்த கடனுதவியை நிலம் வாங்குதல், கட்டிடம் கட்டுதல், புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும்.
இதற்கான வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 9.95 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. முதல்முறையாக தொழில்முனைவோருக்கு சிறப்புத் தொழிற்பயிற்சியும் வழங்கப்படும். கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். தொழில் தொடங்கும் ஆரம்பகட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, இதில் 2 ஆண்டுகள் வரை தவணை ஒத்திவைப்பு காலமும் அடங்கும். கடனை மாதாந்திர தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் தனிநபர் சிபில் ஸ்கோர் 600-க்கும் அதிகமாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.