சென்னை: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை அடையாறு, தீவுத்திடல், சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆவடி, கிளாம்பாக்கம் என முக்கிய பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் என 39 மையங்களில் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 வரை விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்.
அதன் பின்னர், ஆக.1 முதல் டிச.20-ம் தேதி வரை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகங்களில், அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
சென்னையை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பித்து கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.