தமிழகம்

திருப்பத்தூர் தொகுதியில் திருப்புமுனை யாருக்கு?

5-வது முறையாக தக்க வைப்பாரா கே.ஆர்.பெரியகருப்பன்?

இ.ஜெகநாதன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் 5-வது முறையாக இத்தொகுதியை தக்க வைப்பரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், அதிமுக கூட்டணி சார்பில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிடுவதால் இது நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. கே.ஆர்.பெரியகருப்பன் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்று ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.

இவர் தொகுதியில் இருப்போரை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு உறவுமுறையாக பழகியுள்ளார். இவரது தொகுதிக்குள் காரைக்குடி அருகேயுள்ள செட்டிநாடு பகுதி வருகிறது. இப்பகுதியில் தான் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்பட்டது. இது அப்பகுதி வாக்காளர்களை கவர அவருக்கு சாதகமான அம்சமாக உள்ளது.

தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று, அதில் 2 முறை அமைச்சராக இருந்தும் தொழிற்சாலைகளை கொண்டு வராதது, சிங்கம்புணரி பகுதியில் அரசு கல்லூரி தொடங்காதது, சில கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாதது போன்றவை அவர் மீதான குறையாக உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என அடுத்தடுத்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவது அவருக்கு கூடுதல் பலமாக உள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் நேரடியாக களமிறங்க அதிமுகவினர் காத்திருந்த நிலையில், திடீரென தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு (பாஜக சின்னத்தில் போட்டியிட) ஒதுக்கியது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அவர்களை சமாதானப்படுத்தி தீவிர வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர் கே.சி.திருமாறன் ஈடுபட்டு வருகிறார். ரயில் பாதை இல்லாத திருப்பத்தூர் தொகுதிக்கு, மத்திய அரசிடம் பேசி ரயில் பாதை அமைத்து ரயில் சேவையை கொண்டு வருவேன்.

எனது முன்னோர்கள் பிரான்மலையை சேர்ந்தவர்கள். அதனால் என்னை வெளியூர்காரராக நினைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரம் அவருக்கு கூடுதல் பலமாக உள்ளது.

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியும் வெளியூர்க்காரராக கருதப்பட்டாலும், விஜய் ரசிகர்களின் ஆதரவால் நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏப்ரல் 10-ம் தேதி விஜய் காரைக்குடிக்கு சென்றார். அப்போது, திருப்பத்தூர் தொகுதி வழியாக அவரது கார் வந்தபோது, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வரவேற்பு அளித்தனர்.

இது, அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரம்யா மோகன் உள்ளூர்க்காரர் என்பதால் அப்பகுதியில் ஆதரவு இருக்கிறது. இளைஞர்கள், இளம் பெண்கள் இவருக்கு ஆதரவாக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவதால், அதன் தாக்கத்தால் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்பது சாதகமாக உள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் நான்குமுனைப் போட்டி நிலவி வருகிறது. 4 முறை வென்ற கேஆர்.பெரியகருப்பன் 5-வது முறையாக வெல்வாரா என்பதே இத்தொகுதி வாக்காளர்களின் கேள்வியாக உள்ளது.

SCROLL FOR NEXT