பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்த மலர்க்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, சித்ரா.
பெரம்பலூர்: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது நேற்று அதிகாலை கார் மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மனைவி மலர்க்கொடி(35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்பிரமணி மனைவி விஜய லட்சுமி(40), பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி(57), சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா(40).
இவர்கள் உள்ளிட்ட சிலர் தைப்பூசத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை புறப்பட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக பாத யாத்திரை பக்தர்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மலர்க்கொடி, சசிகலா, விஜய லட்சுமி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் மற்றும் பெரம்பலூர் நகர போலீஸார் விரைந்து சென்று, காயமடைந்த சித்ரா, ஜோதிலட்சுமி ஆகியோரை மீட்டு, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஜோதிலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் ஓட்டுநர் கைது: விபத்து நேரிட்ட இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்த சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் கவுதம்(24) என்பவரை பெரம்பலூர் நகர போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.