தமிழகம்

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்: போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் பணிந்திர ரெட்டி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கினால் கூட்டம் அதிகரிக்கும் போது பேருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம் என போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் புறப்பட்டுச் சென்றனர்.

பண்டிகைக் காலம் போல் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பயணிகள் தவிப்பு

இதனால் பேருந்து நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம்காணப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் தங்கள் ஊர்களுக்கான பேருந்துகள் வராமல் இருந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஏராளமானோர் போக்குவரத்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்த கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் பண்டிகைக் காலங்கள், தேர்தல் போன்ற கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுத்து இயக்கினால் இந்த கூடுதல் பேருந்து தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என முன்னாள் போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தி யுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப் பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் இது போன்ற அதிகப்படியான பயண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அமைப்பு குறைவாக உள்ளது.

தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து இயக்குவது இந்த தேவையைப் பூர்த்தி செய்ய உதவலாம். தெற்கு ரயில்வேயும் இந்த நேரங்களில் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

பொதுமக்களும் தங்களின் பயணத்தை திட்டமிட வேண்டும். குடும்பமாகச் செல்வோர் வார நாட்களிலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் பயணங்களை திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT