தமிழகம்

“விஜய் ஆட்சியில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது” - நாராயணசாமி கருத்து

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “விஜய் ஆட்சியில் தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். “ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் என விஜய் போல புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்ல தயாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”இலாகா இல்லாத பதவி காலத்தை முடித்த ஜான்குமாரை போல் தற்போதுள்ள 5 அமைச்சர்களின் காலமும் முடிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. ரங்கசாமியின் செயல்பாட்டால் புதுச்சேரிக்கு ஏன் அமைச்சரவை என கேள்வி எழுகிறது. வாக்களித்த மக்களுக்கு துரோகத்தை என்டிஏ கூட்டணியும், முதல்வரும் செய்கின்றனர்.

நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. கோப்புகளை வைத்து அதிகாரிகள் தூங்குகிறார்கள். முதல்வரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை. பாஜக ஏன் தூங்குகிறது என்று தெரியவில்லை. புதுச்சேரியில் வாய் மூடி மவுனமாக இருக்க காரணம் என்ன? இதற்கு பாஜக தலைவர்களும், பொறுப்பாளர்களும் பதில் சொல்ல வேண்டும்.

என்.ஆர். காங்கிரஸ் அடிமைகளின் கட்சி. முதல்வரை தவிர யாரும் பேச மாட்டார்கள். பாஜக தனது நிலைப்பாட்டை இதுவரை சொல்லவில்லை. புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முதல்வர் தான் இலாகா ஒதுக்குவதில் முடிவு செய்ய வேண்டும் என தட்டிக் கழிக்கிறார். கூட்டணி ஆட்சியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜகவுக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு.

முதல்வர் ரங்கசாமி செய்யாவிட்டால் பாஜகவும் பொறுப்பு தான். நிர்வாகம் குட்டிச்சுவராகிவிட்டது. மக்கள் நலத்திட்டம் மட்டுமில்லாமல் ஐந்து மாதம் அரிசி ரேஷனில் போடவில்லை. எப்போது அரிசி போடப்படும் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும். போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காங்கிரஸ் விரைவில் போராட்டம் நடத்துவோம்.

துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமியை காமராஜருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். காமராஜர் ரெஸ்டோ பாருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினாரா? காமராஜர் ரெஸ்டோ பார்களை பள்ளி, கோயில், குடியிருப்பு பகுதியில் கொண்டு வந்தாரா? தனது கண்ணாடியை கழற்றி விட்டு கைலாஷ் நாதன் பார்க்க வேண்டும். அவரது கண்ணாடியில் கோளாறு உள்ளது.

கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரரான காமராஜரை அவரது நல்ல பெயருக்கு ஆளுநர் களங்கம் விளைவிக்கக் கூடாது. ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் என தமிழக முதல்வர் விஜய் போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்ல தயாரா? தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது. ஊழலை குறைக்க முதல்வர் விஜய் பல முயற்சி எடுக்கிறார்” என்றார்.

அயோத்தி கோயில் விவகாரம் பற்றி பேசும்போது, பழநி விவகாரம் பற்றி பேச மறுப்பது ஏன் என்று கேட்டதற்கு, ”பழநி விவகாரத்தில் விசாரணை நடக்கிறது” என்றார்.

தேர்தலில் வென்று 75 நாட்களாகியும் பிரதமரை சந்திக்காத என்டிஏ அரசு, முதல்வர் ரங்கசாமி புஸ்ஸி ஆனந்தை சந்திக்கிறாரே என்று கேட்டதற்கு, ”அவரிடம் கேளுங்கள்” என்றார்.

SCROLL FOR NEXT