திருக்கழுகுன்றம்: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டினார்.
பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சார்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாநிலங்களவை உறுப்பினர் ம.தனபால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கனிதா சம்பத், ப.தன்சிங், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.வளர்மதி, “விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. விவசாயிகள் கடன் பெற்று பயிரிட்டு, விளைச்சல் கிடைக்கும் வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். எனவே பயிர்க் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும். அணை கட்டும் முயற்சியை மத்திய, கர்நாடக அரசுகளுடன் பேசி தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் உரிமைக்காக அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டது” என்றார்.
மின்சாரக் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டிய வளர்மதி, சட்டம் - ஒழுங்கு விவகாரங்களில் முதல்வர் நேரடியாக பதிலளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, அதிமுக வலுவான அமைப்பாக தொடர்ந்து செயல்படும் என்றும், எதிர்காலத்தில் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் எனவும் பா.வளர்மதி தெரிவித்தார்.