

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளில், இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பற்றிய எந்த குறிப்பும் இல்லை; மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை எனவும், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க துறை தாக்கல் செய்த பதில் மனு அடிப்படையில், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
எந்த முறைகேடும் நடக்கவில்லை என மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், “அமலாக்க துறை அனுப்பிய கடிதங்கள் மற்றும் பதில் மனுக்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபானங்கள் கொள்முதலுக்கு நிறுவனங்களிடம் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
பார் உரிமையாளர்களிடம் இருந்து பார்ட்டி ஃபண்ட் பெறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தடைக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பில்லை. மனுதாரரின் மொபைலில் டாஸ்மாக் அதிகாரிகளின் எண்கள் உள்ளன. இவர் தான் ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விசாரணைக்கு தடை விதிக்க கூடாது. இந்த மனு விசாரணைக்கு உகந்த தல்ல” என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.