அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

 
தமிழகம்

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுக என்பது என்னுடைய வாழ்க்கையில் எல்லாவிதமான ஏற்றத்துக்கும் காரணமாக இருந்தது. எளிய தொண்டனாக 1980-ம் ஆண்டில் இணைந்து கிளைக் கழக செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை அனைத்து பொறுப்புகளையும் வகித்துள்ளேன். 2011-ல் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என உயரிய பொறுப்புகளைக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் 22 மாவட்ட செயலாளர்களை மாற்றியபோதும். என்னை மாற்றாதது அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகும்.

2020-ம் ஆண்டு எந்தவிதமான காரணமும் இல்லாமல், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட போதும். தலைமைக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தேன். 2021-ம் ஆண்டு தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு கழகத்தினரின் மேலான உழைப்பால் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றேன்.

2026-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோதுதான், திருப்பூர் மாவட்ட கழகத்தின் உண்மை நிலை தெரியவந்தது. எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது என்பது. தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில்தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும்.

ஆனால், இன்றோ தலைமையே இயக்கத்தை பார்க்காமல் தங்களை மட்டுமே காத்துக்கொள்வதில் அக்கறை காட்டுகிறது. எதிர்க்கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுய நல கூட்டம் இயங்கி கொண்டிருக்கிறது.

இன்று அனைத்து கட்சிகளும் அதிமுகவினரை அரவணைக்க தயாராக இருக்கும்போது. அதிமுகவின் தலைமை கட்சி நிர்வாகிகளை நீக்குவதில்தான் கவனம் செலுத்துகிறது. நீண்ட யோசனைக்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்தேன். துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT