திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி, முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தரையில் உருண்டு போராட்டம் நடத்தினார். படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி,முன்னாள் மேயர் தலைமையில் வியாபாரிகள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி டவுன் பகுதியில் இயங்கிவந்த நேதாஜி போஸ் மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின்கீழ் இடித்து அகற்றப்பட்டு, ரூ.10.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இங்கு, 75 கடைகள் உள்ளன. கடைகளுக்கு சதுரஅடிக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டன. இதனால், 25 கடைகள் மட்டுமே ஏலம் போயின.
இந்நிலையில், ஏலம் எடுக்கப்பட்ட கடைகளும் வாடகை அதிகம் எனக்கூறி, கடைக்கான மாத வாடகையை வியாபாரிகள் செலுத்தாமல் உள்ளனர். இதனால் வாடகை நிலுவை வைத்த கடைகளைப் பூட்டி, மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது. ‘கடைக்கான வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும்’ என வலியுறுத்தி, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், கடைகளைமறு ஏலம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், முன்னாள் மேயர் புவனேஸ்வரி தலைமையில் வியாபாரிகள் நேதாஜி மார்க்கெட்டில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து உருண்டு, மாநகராட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீஸார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘மாநகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் தீவிரம் அடையும்’ என்று கூறிய அவர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.