வி.மருதராஜ், திண்டுக்கல் சி.சீனிவாசன்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுவின் செயல்பாடுகள் மோசமானதற்கு காரணம், திண்டுக்கல் சி.சீனிவாசன்தான். அவர் மாவட்டத்தில் தலைமையேற்ற பிறகு கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது என முன்னாள் மேயரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான வி.மருதராஜ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதியில் எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட நத்தம் ஆர்.விஸ்வநாதன், பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிர்நிலைப்பாடு எடுத்து, பின்னர் மீண்டும் ஆதரவு நிலைப்பாட்டுக்கு திரும்பினார்.
இந்த நிகழ்வில், கட்சி தலைமை யுடனான பிரச்சினைக்குத் தீர்வு வந்த போதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சினை பெரிதாகி வருகிறது. நத்தம் ஆர்.விஸ்வநாதனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
அதேபோல், வி.மருதராஜும் கட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனையும், முன்னாள் மேயர் வி.மருதராஜையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தனது மகனை கட்சியில் தக்கவைக்கத் தெரியா தவருக்கு மீசை எதற்கு, வேட்டி, சட்டை எதற்கு, விசுவாசம் இல்லாதவர் என முன்னாள் மேயர் மருதராஜை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இந்த விமர்சனம் குறித்து முன்னாள் மேயர் வி.மருதராஜ் கூறியதாவது:
நான் அதிமுகவில் நீடிக்கிறேன். பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் இயங்குகிறேன். மாவட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசனின் தலைமையில் இயங்குவதில் அதிருப்தி உள்ளது. இதனால், அவர் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை.
சீனிவாசனின் செயல்பாடுகள் பிடிக்காமல்தான் எனது மகன் தவெகவுக்கு சென்றார். 50 வயதை கடந்தவர், தன்னிச்சையாக முடிவெடுப்பவரை நான் எப்படி தடுக்க முடியும். கட்சி பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை.
சீனிவாசன் செயல்பாடு பிடிக்க வில்லை என்றுதான் வெளியேறினார். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் கட்சியில் இருப்பர். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வின் செயல்பாடுகள் மோசமானதற்கு சீனிவாசன்தான் காரணம்.
அவர் மாவட் டத்தில் தலைமையேற்ற பிறகு கட்சி பின்னடைவை சந்தித்தது. மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் தோல்விக்கு காரணம் சி.சீனி வாசன்தான். என்னைக் கட்டுப்படுத்துவதற்கு, பேசுவதற்கு பொதுச் செயலாளர் பழனிசாமிக்குதான் உரிமை உண்டு. இவர் எங்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.