தமிழகம்

இந்திய அரசியலமைப்பை தமிழக ஆளுநர் பகிரங்கமாக அவமதித்திருக்கிறார்: நாராயணசாமி

அ.முன்னடியான்

புதுச்சேரி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. சம்பிரதாயப்படி ஆளுநர் சட்டப்பேரவையில் ஆளும் அரசால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட உரையை வரிப்பெயராமல் படிக்க வேண்டும்.

ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழக ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். இந்தாண்டும் அதே நிலை நீடித்திருக்கிறது. ஆளுநர் சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடவில்லை என்ற காரணத்தை காட்டி அவையில் இருந்து அவருடைய உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்திருக்கின்றார்.

இது மிகவும் தவறான செயல். இது ஜனநாயக படுகொலைக்கு சமம். இந்திய அரசியலமைப்பை ஆளுநர் பகிரங்கமாக தமிழக மக்கள் மத்தியில் அவமதித்திருக்கிறார். அதற்கு ஆளுநர் நிபந்தனையின்றி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் போது துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி சட்டப்பேரவையில் நான் பட்ஜெட்டை வாசிப்பதற்கு முன்பாக அந்த கோப்பை அனுப்பி அதற்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். கிரண்பேடி அதற்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தினார்.

நான் சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் இல்லாமையிலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். கிரண் பேடி துணை நிலை ஆளுநர் உரையை வாசிப்பதற்கு முன்பாக அவரிடம் கோப்பை அனுப்பிய போது சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறினார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படி தொடர்ந்து கிரண்பேடி மத்தியில் உள்ள மோடி, அமித்ஷாவின் உத்தரவின் பேரில் எங்களின் அரசுக்கு தொல்லை கொடுத்தார். இதே நிலையை தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.

அரசுக்கு எதிர்மறையான கருத்துகளை பொதுமேடையில் பேசுகிறார். தமிழக அரசை நேரடியாக விமர்சிக்கிறார். இது ஒரு துரதிஷ்டமான விஷயம். ஒரு ஆளுநராக இருப்பவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால் ஆளுநர் ரவி எல்லை மீறி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமிழக அரசுக்கும், ஆளும் திமுக ஆட்சிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு மூல காரணம் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான். ஆளுநர் ரவியை அவர்கள் ஊக்குவித்து இதுபோன்ற சட்ட விரோத, ஜனநாயக விரோத, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான வேலைகளை செய்வதற்கு தூண்டிவிடுகிறார்கள்.

மத்தியில் உள்ள மோடி அரசு ஜனநாயகத்தை மதிப்பதில்லை. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம், சமத்துவம், சசோதரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதில்லை. சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் ஆளுநர் தலையிடக்கூடாது என்பதை பற்றி மோடி அரசு கவலைப்படுவதில்லை.

நாடாளுமன்றத்தில் மட்டும் குடியரசு தலைவர், மத்தியில் உள்ள மோடி அரசு அனுப்புகின்ற அந்த உரையை வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் அனுப்புகின்ற உரையை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணிப்பதை ஊக்குவிக்கின்றனர்.

இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக, மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆளுநர் ரவி செயல்பாடு நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது. ஆளுநராக இருக்க தகுதியில்லாத ஒருவர் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். உடனடியாக ஆளுநர் ரவி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போக வேண்டும்” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT