படம் எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: “குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், பட்டா என எது வாங்கவும் பணம் தராமல் அரசு அலுவலகங்களில் சான்றிதழ் வாங்க முடியாது. தமிழக முதல்வர் விஜய் சொல்வதுபோல் லஞ்சம் வாங்கினால் சிறை என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியால் சொல்ல முடியுமா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகளை தரக்கோரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: “ரேஷன் அரிசிக்கான பணம், முதியோர் பணம் தாமதமாக வழங்கப்படுகிறது. அண்ணன் மோடி ஆட்சி நடக்கையில் தம்பி ரங்கசாமி அவரை சந்திக்கவில்லை.
கோரிமேட்டை முதல்வர் ரங்கசாமி தாண்ட மாட்டார். டெல்லியில் போய் கேட்டால்தான் கிடைக்கும். முதல்வர் கூட்டத்தில் வலியுறுத்தி கேட்டுதான் நான் நிதி வாங்கினேன் அப்பா பைத்தியம் சாமி கோயிலில் அமர்ந்து கொண்டு இருந்தால் எப்படி பிரதமர் மோடி நிதி தருவார்.
சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை. அதை முதல்வர் கண்டுகொள்வதே இல்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளிநாட்டில் தான் இருப்பார். இதர துறைகளில் அமைச்சர்கள் செயல்பாடே தெரியவில்லை. என்.ஆர் காங்.- பாஜக இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலேயே தெரிந்தது.
நிரந்தர சபாநாயகரை அமர்த்த முடியாமல் பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள். எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. முதல்வர் முன்பாக அமைச்சர்கள், எம்எல்ஏ அமர முடியாது. ரங்கசாமி மகாராஜா போல் செயல்படுகிறார்.
காவல்துறையில் ஒவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் மேலிடத்துக்கு தர வேண்டும். ஸ்பா பெயரில் தவறு நடக்கிறது. மேலிடத்துக்கு தருவதாக கூறி அங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது. மேலிடத்துக்கு அடிமையாக காவல்துறை இருக்கிறது.
முதல்வர், அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. செயல்படாத ஆட்சிதான் புதுச்சேரியில் நடக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் ரெஸ்டோபார் திறந்தது தான் முதல்வர் ரங்கசாமியின் சாதனை. கோயில், சர்ச், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பேருந்து நிறுத்தங்கள் அருகில் ரெஸ்டோபார் உள்ளது.
தொழிற்சாலை திறக்காமல் 900 ரெஸ்டோபார் இருக்கிறது. ரூ.40 லட்சம் தந்தால் உடனடியாக ரெஸ்டோபார் திறக்க அனுமதி தரப்படுகிறது. நான் முதல்வராக இருந்தபோது கூடுதலாக ஒரு ரெஸ்டோபார் திறக்கவில்லை. புதுச்சேரியில் நிர்வாகம் சீரழிந்துள்ளது. குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ், பட்டா என எது வாங்க வேண்டும் என்றாலும் பணம் தராமல் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதில்லை. பணம் கொடுக்காமல் எந்த விதமான சான்றிதழ்களும் வாங்க முடியாது.
தமிழக முதல்வர் விஜய் சொல்வதுபோல் லஞ்சம் வாங்கினால் சிறை என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியால் சொல்ல முடியுமா? முதுகெலும்பு உள்ளதா? மோசமான ஆட்சி நடக்கிறது” என்று நாராயணசாமி கடிந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் தலைவர் பிரபுராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.